சென்னையை நெருங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தாம்பரத்தில் அதிக மழை


சென்னையை நெருங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தாம்பரத்தில் அதிக மழை
x
தினத்தந்தி 11 Nov 2021 1:59 PM IST (Updated: 11 Nov 2021 1:59 PM IST)
t-max-icont-min-icon

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கில் 130 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

கனமழையால்  சென்னையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி கவர்னர்  மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை நிலவரம் அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்.ஆர்.சி. நகரில் 13.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் பிற பகுதிகளில் பதிவாகியுள்ள மழை மி.மீ அளவில்;-

* தாம்பரம் - 232.9
* சோழவரம் - 220.0
* எண்ணூர் - 205.0
* கும்மிடிப்பூண்டி- 184.0
* செங்குன்றம் -180.0
* மீனம்பாக்கம் -158.5
* விமான நிலையம் -116.0

சென்னையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சோழவரத்தில் 220 மில்லி மீட்டர், எண்ணூரில் 205 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல, கும்மிடிபூண்டியில், 184 மில்லி மீட்டர் மழையும், ரெட் ஹில்ஸ் பகுதியில் 180 மில்லி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது. மேலும், மீனம்பாக்கம் பகுதியில் 158.5 மில்லி மீட்டர் மழையும், விமான நிலையம் பகுதியில் 116 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story