மணப்பாறை போலீசாரை மிரட்டிய தி.மு.க. பொறுப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மணப்பாறை போலீசாரை மிரட்டிய தி.மு.க. பொறுப்பாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆட்சி அதிகாரத்தில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியவர் அண்ணா. ஆனால், இன்று எல்லா மட்டத்திலும் தி.மு.க.வினரின் தலையீடு தலைவிரித்து ஆடுகிறது. தற்போது முதல்-அமைச்சர் வசமிருக்கும் காவல்துறையிலும் தி.மு.க.வினர் தலையிட தொடங்கி உள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்ததையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று சோதனை நடத்தி உள்ளனர். அப்போது மணல் அள்ளிக்கொண்டிருந்த ஒரு ஜே.சி.பி. மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் டிரைவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
விசாரணையின் போது அந்த வாகனங்கள் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக 3 டிரைவர்களையும் காவல்துறையினர் விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி பேச்சு வார்த்தை நடத்தி கடைசியாக 2 பழைய வாகனங்களை ஒப்படைக்க ஆரோக்கியசாமி சம்மதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கீழத்தானியம் பகுதி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மணல் கடத்தி வந்த லாரியை பிடிக்க முயற்சித்த போது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் லாரியில் இருந்தவர்கள் அவர்களை தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மணல் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. சட்டம்-ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரை மிரட்டுவதும், வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.
எனவே, முதல்-அமைச்சர் தலையிட்டு காவல்துறையினரை மிரட்டிய தி.மு.க. பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மீதும், புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்தவர்கள் மீதும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மணல் கடத்தல் மற்றும் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story