சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால், எம்.பி. பதவியை கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் குறைகிறது.
சென்னை,
சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் மாநிலங்களவை எம்.பி.க்களாகவும் இருந்து வந்தனர்.
தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர். இதனால், இவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்களாக தொடர்வார்களா?, அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி.க்களாக தொடர்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜினாமா
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது, கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கான கடிதத்தை மாநிலங்களவை செயலாளரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.
அதனால், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக தொடர இருக்கின்றனர். எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையிலேயே புதிதாக 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. பலம் குறைகிறது
அதாவது, ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.கள் தேவை. தற்போதைய சூழ்நிலையில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 66 என்று இருப்பதால், ஒரு எம்.பி.யை மட்டும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மற்றொரு இடம் தி.மு.க.வுக்கு சென்றுவிடும்.
இதனால், மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் குறைகிறது.
Related Tags :
Next Story