தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி: தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி இன்று முக்கிய ஆலோசனை
![தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி: தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி இன்று முக்கிய ஆலோசனை தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி: தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி இன்று முக்கிய ஆலோசனை](https://img.dailythanthi.com/Articles/2021/Mar/202103040758172307_DMK-Block-allocation-drag-on-in-alliance-Dinesh-Kundurao_SECVPF.gif)
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால் தி.மு.க. தரப்பில், ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் (2016) கூட்டணியில் இல்லாத ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள் இந்த முறை அங்கம் வகித்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 20 முதல் 22 தொகுதிகள்தான் வழங்க முடியும்' என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேட்கும் தொகுதியில் இருந்து பாதிக்கு பாதி எண்ணிக்கையை குறைக்கும் தி.மு.க.வின் நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தி.மு.க-காங்கிரஸ் இடையே நடைபெற்ற 2 கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு ஏற்படவில்லை. தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணி கதவு அடைப்பா?
திருச்சியில் வருகிற 7-ந் தேதி நடைபெறும் தி.மு.க. கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளைக்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட வேண்டும் என்பதில் தி.மு.க. முனைப்பு காட்டி உள்ளது.
அதன்படி தங்களது முடிவை ஏற்கும் கட்சிகளுக்காக கூட்டணி கதவை திறந்து வைப்பதும், ஏற்காத கட்சிகளுக்கு கதவை அடைப்பதும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிலவரத்தை கட்சி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களிடம் விளக்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் நாம் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றால் என்ன செய்வது? அவர்கள் வழங்கும் தொகுதியை ஏற்றுக்கொள்ளலாமா? என்பது குறித்து ஒவ்வொரு நிர்வாகிகளிடமும், மாவட்ட தலைவர்களிடமும் தினேஷ் குண்டுராவும், கே.எஸ்.அழகிரியும் தனித்தனியாக கருத்துகள் கேட்டு ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது. பின்னர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் உத்தரவுக்கு ஏற்ப தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story