வருகிற 14-ந்தேதி சென்னையில் விழா வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பாதையை பிரதமர் திறந்து வைக்கிறார்
சென்னைக்கு வருகிற 14-ந்தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடி, வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே முடிந்துள்ள மெட்ரோ ரெயில் பாதையை திறந்து வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் வழித்தடத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப்பாதையில் ரெயில்போக்குவரத்துக்காக திறப்பு, சென்னை கடற்கரையில் இருந்து அத்திப்பட்டு வரையிலான 4-வது ரெயில் வழித்தடம் தொடக்கம் மற்றும் அர்ஜூன் எம்.பி.டி. எம்.கே-ஐஏ ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைப்பது, கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலை வகிக்கிறார். விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் பயண விவரம்
விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு வருகிறார். விமானநிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பிரதமர் காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம், விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.
பின்னர் விழா நடக்கும் மேடைக்கு காலை 11.15 மணிக்கு வந்து விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பகல் 12.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, சென்னை விமானநிலையத்துக்கு பகல் 1.30 மணிக்கு பிரதமர் வருகிறார். அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் 1.35 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி புறப்பட்டு செல்கிறார். விழா ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
3 முறை தமிழகம் வருகை
தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் 15 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை பிரதமரின் அறிவுறுத்தலின்படி தலா 5 நிகழ்ச்சிகளாக மாற்றி 3 முறை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பிரதமர் 3 முறை தமிழகம் வருகிறார். முதல் நிகழ்ச்சி வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
அடுத்த வரும் விழாக்களை கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடத்தவும் பரிசீலனை நடந்து வருகிறது. அரசு சார்பில் நடைபெறும் பிரதமரின் 3 நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சில மத்திய மந்திரிகளும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடல் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவின்படி பிரதமரின் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் முறைப்படி வெளியிடப்படும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story