கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.வில் இணைந்தார்


கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 11 Feb 2021 11:15 PM (Updated: 11 Feb 2021 7:58 PM)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.வில் இணைந்தார்.

சென்னை, 

சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் 10 ஆயிரம் பேருடன் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நேற்று இரவு பொதுக்கூட்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத்தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகர் ராதாரவி உள்பட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கராத்தே தியாகராஜனுக்கு, பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் காவித்துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

நரேந்திர மோடி மீது ஈர்ப்பு

பா.ஜ.க.வில் இணைந்த பின்னர் கராத்தே தியாகராஜன் பேசியதாவது:-

பா.ஜ.க. ஒரு தேசிய இயக்கம். இந்த இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக, இந்தியாவின் இரும்பு மனிதராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்ந்து வருகிறார். அவரது ஏராளமான செயல்பாடுகளில் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பே, என்னை பா.ஜ.க.வில் இணைய செய்தது.

தற்போது மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ‘வேல்' தூக்கும் நிலைக்கு வந்து விட்டனர். இதேபோல தமிழக காங்கிரஸ் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. பேரம் பேசி அங்கே பதவிகள் வழங்கப்படுகிறது. காமராஜர் நினைவிடத்தில் இதுவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தியது இல்லை. இது சரித்திரத்தில் மிகப்பெரிய கெட்ட பெயரை காங்கிரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

அதேவேளை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் ஏமாற்றுகிறார்

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு மாற்றம் தரும் சக்தியாக பா.ஜ.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை தி.மு.க. எப்படி எல்லாம் சீரழித்தது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்து இருக்கிறார்கள். தி.மு.க.வில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் இதுவரை மக்களை சந்தித்து மனு வாங்கியது உண்டா?

ஆனால் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் மனு வாங்கும் பிரசாரம் செய்கிறார். மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் வேல் தூக்குவது நமக்கு கிடைத்த வெற்றி. நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மகத்தான இடத்தில் வெற்றி பெறப்போவது உறுதி. அதேவேளை தி.மு.க.வை விரட்டி அடிக்க வேண்டிய பணிகளிலும் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும்

பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘தி.மு.க. நிச்சயம் ஆட்சிக்கு வர மாட்டார்கள். அதுவே தமிழக மக்களுக்கு தி.மு.க. செய்யும் நன்மையாக இருக்கப்போகிறது. இனி சென்னை மாநகரம் பா.ஜ.க.வின் கோட்டை ஆகும்’’, என்றார்.

தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி பேசுகையில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நிலைமை மோசமாகும். தமிழகத்தின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தின் எதிரி என்றுமே மு.க.ஸ்டாலின்தான்’’, என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பாஸ்கர், டாக்டர் குமரன் தலைமையில் ஏராளமான ரஜினிகாந்த் ரசிகர்களும், தொழிலதிபர் ரங்கா பாபு உள்ளிட்டோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Next Story