ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்


ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 16 Jan 2021 1:58 AM IST (Updated: 16 Jan 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்.

சென்னை,

சென்னை மதுரவாயலில் பா.ஜ.க. சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா' என்ற பெயரில் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேட்டி-சட்டையில் வந்திருந்த நட்டா, தமிழில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசும்போது, விவசாயிகளின் விழா இது. உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ். தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பா.ஜ.க. பெரிய சக்தியாக வரும் என்றார்.

விழாவில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் க.காயத்ரிதேவி, ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.

பா.ஜ.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘உலகமே வியந்து பார்க்கக்கூடிய வகையில் பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கைகள் இருக்கின்றன. அனைத்து துறைகளிலும் அவருடைய அணுகுமுறையை பார்க்கையில், ஒரு சிறந்த தலைவராக தெரிகிறார். அவருக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் என்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டேன். என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன்' என்றார்.

டாக்டர் க.காயத்ரிதேவி, 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர். அதன்பின்னர் அவர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். மேலும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்து, கேரளா மற்றும் லட்சத்தீவுக்கு பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.

முன்னதாக விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் நிகழ்ச்சியை நட்டா தொடங்கி வைத்தார். பின்னர் சிலம்பம், கும்மி, பரதம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடைபெற்றன.

இந்த விழாவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story