தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் ‘பார்’கள் திறப்பு
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் ‘பார்’கள் நேற்று திறக்கப்பட்டன.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதத்தில் டாஸ்மாக் மற்றும் அதனை சார்ந்த ‘பார்’கள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் வெளியிடப்பட்டு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ‘பார்’கள் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது. ‘பார்’கள் திறக்கப்படாததால் வாடகை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், ‘பார்’களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் ‘பார்’ உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் ‘பார்’கள் திறக்கப்பட வேண்டும் என்று மதுப்பிரியர்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் டாஸ்மாக் ‘பார்’கள் 29-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று அரசு அனுமதி அளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.
அதன்படி, ஏறக்குறைய 9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் ‘பார்’கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இத்தனை நாட்களாக ‘பார்’கள் மூடி கிடந்ததால் நேற்று காலை முதலே ‘பார்’களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். சிதறி கிடந்த மதுபாட்டில்கள், காலியான ஊறுகாய்-நொறுக்கு தீனி பாக்கெட்டுகள் அகற்றப்பட்டன. ‘பார்’கள் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. மூலைமுடுக்குகளில் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டன. ‘பார்’களில் நுழையும் முன்னர் மதுபிரியர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்தே மதுபிரியர்கள் ‘பார்’களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதில் இருந்தே, மதுபிரியர்கள் ஆர்வத்துடன் ‘பார்’களை நோக்கி உற்சாகமாக அடியெடுத்து வைத்து சென்றனர். ‘பார்’கள் திறக்கப்பட்ட தகவல் தெரியாமல் வந்திருந்தவர்களும் இன்ப அதிர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் ‘பார்’களுக்கு சென்றனர். கைகளில் தெளிக்கப்பட்ட கிருமிநாசினியையும் பன்னீர் துளிகளாக எண்ணி மதுபிரியர்கள் மகிழ்ச்சியுடன் ‘பார்’களில் நுழைந்தனர்.
கடந்த 9 மாதங்களுக்கு பிறகு பார்கள் திறக்கப்படுவதால் ‘ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...’ எனும் ரீதியில் தங்களையே அறியாமல் ‘பார்’களை சுற்றி சுற்றி பார்த்து ஆனந்தம் அடைந்தனர். சந்தோஷத்துக்கும், சோகத்துக்கும் மதுவை தேடி வந்தநிலையில் நேற்று ‘பார்’கள் திறக்கப்படுவதை கொண்டாடவும் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகள் நோக்கி படையெடுத்தனர். ஆசையுடன் தேவையான மதுபாட்டில்களை வாங்கி அதை பத்திரமாக ‘பார்’களுக்குள் ஏந்தி சென்றனர். அங்கு விரும்பிய ‘சைட் டிஷ்’ உடன் சாப்பிட்டு மதுபிரியர்கள் நேற்று குதூகலம் அடைந்தனர்.
‘பார்’கள் திறக்கப்பட்டதால் அதன் உரிமையாளர்களும், ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு ‘பார்’ உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.அன்புசெல்வன் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் கடந்த 9 மாதங்களாக வாழ்வாதாரம் பாதித்த நிலையில் ‘பார்’களுக்கு வாடகை கொடுக்கவேண்டிய நிலை இருந்தது. மேலும் எங்களை நம்பியுள்ள ஊழியர்களின் வாழ்வாதாரமும் பறிபோயிருந்தது. தற்போது எங்களின் கோரிக்கைகளை ஏற்று ‘பார்’களை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி. நிச்சயம் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்போம். தற்போது ‘பார்’கள் திறக்கப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே வேளை ‘பார்’கள் திறப்பு நடவடிக்கை டாஸ்மாக் கடைகளுக்கு அருகேயுள்ள பெட்டிக்கடைகளின் நொறுக்குத்தீனி வியாபாரத்தையும், பாட்டில் மற்றும் குப்பைகள் சேகரிப்போரையும் பாதித்துள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.
அதேபோல ‘பார்’ உள்ளே மதுபிரியர்கள் கூட்டமாக கூடியிருக்கிறார்களா? எச்சில் துப்புகிறார்களா? உள்ளிட்டவை குறித்து ஊழியர்கள் கண்காணித்தனர். ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்றினர். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ‘பார்’ வளாகமும், கழிப்பறைகளும் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. ‘பார்’கள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மனமகிழ்ச்சியுடன் நேற்று மது அருந்தியதை பார்க்கமுடிந்தது.
Related Tags :
Next Story