ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் ஒருவாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை


ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் ஒருவாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை
x
தினத்தந்தி 28 Dec 2020 5:45 AM IST (Updated: 28 Dec 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத் ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்று ஆஸ்பத்திரியில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை திரும்பினார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவில் இருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது அதாவது ‘நெகட்டிவ்’ என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 25-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவருடைய உடல்நலம் நன்கு தேறியுள்ளது. 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்த் கடுமையான ரத்த அழுத்தம் மற்றும் சோர்வோடு கடந்த 25-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர மருத்துவ மேற்பார்வையில் இருந்தார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. அவருடைய ரத்த அழுத்தம் இப்போது நிலையாக உள்ளது. அவர் சுகமாக இருப்பதை உணர்கிறார். அவருடைய மருத்துவ நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று (நேற்று) ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பிந்தைய நிலை, மாறி, மாறி ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக கீழ்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

* அடிக்கடி ரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டு, ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும்.

* உடல் ரீதியான குறைந்தபட்ச செயல்பாடு இருக்கவேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.

இந்த நிபந்தனைகளோடு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் தவிர்க்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். ரஜினிகாந்த் உடன் அவருடைய மகள் சவுந்தர்யா காரில் அமர்ந்திருந்தார்.

அவருடைய வீட்டின் அருகே திரண்டிருந்த ரசிகர் கள், ‘கடவுளே’, ‘தெய்வமே’ என்று கோஷமிட்டனர். அப்போது ரஜினிகாந்த் காருக்குள் இருந்தப்படியே, ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு, கும்பிட்டுவிட்டு சென்றார். இதன் பின்னர் ரசிகர்கள், தேங்காயில் சூடம் ஏற்றி தெருவில் உடைத்துவிட்டு, கலைந்துச் சென்றனர்.

Next Story