தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு
தமிழகத்தின் தலைமைச்செயலாளர் கே.சண்முகத்துக்கு மேலும் 3 மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தின் 45-வது தலைமைச்செயலாளராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றார்.
அவரை தொடர்ந்து 46-வது தலைமைச்செயலாளராக கே.சண்முகம் 2019-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பதவி ஏற்றார். கே.சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி பிறந்தார். 60 வயது நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் கடந்த ஜூலை 31-ந் தேதி பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில் மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளருக்கு (முழு கூடுதல் பொறுப்பு) கடந்த ஜூன் 29-ந் தேதி கடிதம் அனுப்பியது.
அதில், தலைமைச்செயலாளர் பதவியில் கே.சண்முகம் ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து அக்டோபர் 31-ந் தேதிவரை 3 மாதங்களுக்கு பணியில் நீடிப்பார் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மாதம் 31-ந் தேதியுடன் பணி நிறைவடையும் நிலையில், கே.சண்முகத்துக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. அதற்கான பதில் கடிதத்தை தமிழக பொதுத்துறை முதன்மைச்செயலாளருக்கு (முழு கூடுதல் பொறுப்பு), மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை 14-ந் தேதி (நேற்று) அனுப்பியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தலைமைச்செயலாளர் கே.சண்முகத்தின் பணி தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து கடந்த ஆகஸ்டு 13-ந் தேதியிட்ட கடிதம் வரப்பெற்றது. அதில் கோரப்பட்டுள்ளதுபடி, தலைமைச் செயலாளர் பதவியில் கே.சண்முகம் வரும் நவம்பர் 1-ந் தேதியில் இருந்து 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை நீடிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமைச்செயலாளர் கே.சண்முகத்தின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடியாகும். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார். பின்னர் ஐ.ஏ.எஸ். படித்த அவர் 1985-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதியன்று தமிழக அரசு பணியில் சேர்ந்தார்.
தமிழக அரசின் மிக முக்கிய பொறுப்புகளை அவர் கையாண்டுள்ளார். திறமையான பணியின் காரணமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளின் ஆட்சியிலும் அவர் நிதித்துறை செயலாளராக நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story