பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.32 அடியாக உள்ளது.
பவானிசாகர்,
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 769 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.40 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 700 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 623 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.36 அடியாக இருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.32 அடியாக உள்ளது. நீர் இருப்பு - 28.9 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்து - 2,326 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Related Tags :
Next Story