அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு; வழிகாட்டு குழு அமைக்க தடை நீங்கியது
அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே நேற்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அதில் யார்-யார் இடம்பெறுவார்கள் என்பது இன்று முடிவாகும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை,
சமீபத்தில் அ.தி.மு.க.வில் உயர்மட்ட குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடந்தது.
செயற்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை உடனே அறிவிக்க வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், முதல்- அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதலில் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
இதனால், இருதரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில மூத்த தலைவர்கள் அங்குள்ள அறையில் அமர்ந்து பேசினார்கள்.
அதன்பின்னர், வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வரும் 7-ந் தேதி (அதாவது நாளை) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து, முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், நாளை அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகுமா? என்று அக்கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், செயற்குழு கூட்டம் முடிந்து 10 நாட்கள் ஆகியும், தொடர்ந்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள்தான் நடந்து வந்ததே தவிர, இறுதி முடிவு எட்டப்படாமல் இருந்து வந்தது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பொறுத்தவரை, பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத்தான் வலியுறுத்தினார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நிலைப்பாடு, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் முதல்- அமைச்சரிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். முதல்-அமைச்சர் கூறிய கருத்துகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் வந்து தெரிவித்தனர். நேற்று காலை நடந்த கூட்டத்தில் முதற்கட்டமாக ஒரு நல்ல உடன்பாடு ஏற்பட்டது.
அதாவது, நேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உடன் இருந்தனர்.
அப்போது நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்பது பற்றியும், முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது பற்றியும் சுமுக முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பது உறுதியாகிவிட்டது.
வழிகாட்டு குழுவில் இடம்பெற போகும் உறுப்பினர்கள் யார் - யார்?, அந்த குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கும்? என்பது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றம் இருக்கும். அதில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டுவிட்டால், நாளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இதுகுறித்த அறிவிப்பையும் ஒன்றாக இணைந்து வெளியிடுவார்கள். நேற்று பேச்சுவார்த்தையில் நடந்த முன்னேற்றம் குறித்து இருதரப்புக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று மாலையில் தேனியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு இரவு சென்னை வந்து சேர்ந்தார்.
Related Tags :
Next Story