புதுச்சேரியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன


புதுச்சேரியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன
x
தினத்தந்தி 25 Sept 2020 10:38 AM IST (Updated: 25 Sept 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஜீன்பால் என்பவர் வீட்டில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன.

கும்பகோணம்,

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கடந்த 2016 ஆம் ஆண்டு புதுச்சேரி உப்பளம் கோலாஸ் நகரில் 11 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேரி தெரசா வனினா ஆனந்தி என்பவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் மேரி தெரசா வனினா ஆனந்தியின் சகோதரரான ஒயிட் டவுன் ரோமண்ட் ரோலண்ட் வீதியில் வசித்து வரும் ஜுன்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டிலும் சாமி சிலைகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அதற்கு முன் தனது வீட்டில் இருக்கும் சிலைகள் தொடர்பாக ஜுன்பால் ராஜரத்தினம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னிடம் உள்ள சிலைகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், ஐ.ஜி. டி.எஸ்.அன்பு ஆகியோர் உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள ஜுன்பால் ராஜரத்தினம் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது.

அப்போது ஜுன்பால் ராஜரத்தினம் வீட்டில் இருந்து நடராஜர், நடமாடும் சிவன், பார்வதி, அம்மன், விநாயகர், பிச்சாண்டவர், அர்த்தநாரீஸ்வரர், சம்பந்தர் உள்பட 60 ஐம்பொன் மற்றும் உலோக சிலைகள், 14 பழங்கால கற்சிலைகள் என மொத்தம் 74 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சிலைகள் புதுச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்கான சான்றிதழ் பெறப்பட்டது.

இதன்பின் அவற்றை தமிழகத்திற்கு கொண்டு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அந்த சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் ஜீன்பால் வீட்டில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டன.

Next Story