பகுதி நேர நூலகங்கள் தவிர பொது நூலகங்கள் 1-ந் தேதி முதல் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி


பகுதி நேர நூலகங்கள் தவிர பொது நூலகங்கள் 1-ந் தேதி முதல் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 28 Aug 2020 9:45 PM (Updated: 28 Aug 2020 9:42 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பகுதி நேர நூலகங்கள் தவிர மற்ற அனைத்து பொது நூலகங்களும் வருகிற 1-ந் தேதியில் இருந்து இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து நூலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களையும் மூட ஆணையிடப்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு பொது நூலக இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள் (314 முழு நேர நூலகம்), 14 நடமாடும் நூலகங்கள், 1,915 கிராம நூலகங்கள், 749 பகுதி நேர நூலகங்கள் என தமிழகத்தில் 4,638 நூலகங்கள் செயல்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து அவை மூடப்பட்டுள்ளன.

மக்களின் நலனுக்காக அவை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே பகுதி நேர நூலகங்களைத் தவிர மற்ற நூலகங்களை வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் சில கட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார். அதன்படி, கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மத்திய நூலகங்கள், முழு நேர கிளை நூலகங்கள் ஆகியவற்றில் மட்டும் நூல்களை வழங்கும் பிரிவு, குறிப்பு எடுக்கும் பிரிவு, சொந்த புத்தகம் வாசிக்கும் பிரிவு ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்படும்.

கிளை நூலகம் மற்றும் கிராம நூலகங்களில் நூல்களை வழங்கும் பிரிவு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். இவை தங்களின் இயல்பான நேரப்படி அனைத்து வேலை நாட்களிலும் பிற்பகல் 2 மணிக்கு முன்பு வரை இயங்கலாம். இவை தவிர மற்ற நூலகங்கள் அனைத்தும் வேலை நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். மேலும், கொரோனா தொற்று காலகட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டிகள் நூலகத்துக்கும் பொருந்தும்படி ஆணையிட வேண்டும் என்றும் அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை அரசு ஏற்று, பகுதி நேர நூலகங்கள் தவிர மற்ற அனைத்து நூலகங்களும் செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் நூலகங்களை திறக்கக் கூடாது. கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் வாசகர் யாரும் நூலகத்துக்கு வரக்கூடாது. ஏ.சி. வசதியை இயக்கக் கூடாது. சொந்த புத்தகம் வாசிப்பு பிரிவில் இருப்பவர்கள், புத்தகங்கள், மடிக்கணினி போன்றவற்றை பரிமாறிக்கொள்ள அனுமதி கிடையாது. மற்ற பிரிவுகளுக்கு அந்த பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. குழுவாக விவாதித்தல் அனுமதிக்கப்படக் கூடாது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு நூலகங்களில் அனுமதி இல்லை. துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து தேவையான புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும்.

வாசகர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளிவிடப்பட வேண்டும். அதற்கேற்ற குறியீடுகளை வரைந்து வைக்க வேண்டும். இருக்கை வசதியில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

கையை சுத்தப்படுத்தும் வசதிகள் வைக்கப்பட வேண்டும். வாசகர்கள் நேரடியாக புத்தகத்தை எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து நூலக ஊழியர்களும் முககவசம், கையுறை அணிய வேண்டும்.

நூலகத்துக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். சராசரி உடல் வெப்பநிலை 99 டிகிரி பாரன்கீட் (37.2 சி) அளவுக்கு மேல் இருந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story