இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? மு.க.ஸ்டாலின் கேள்வி


இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 10 Aug 2020 3:53 PM IST (Updated: 10 Aug 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக  நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து செல்லும்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் கூறினார்.

ஆனால், கனிமொழி எம்.பி.யோ, “எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்” என்றார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி ‘நீங்கள் இந்தியரா?’ என்று கனிமொழியிடம் கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, கனிமொழி எம்.பி. டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில், உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர்
திமுக எம்.பி., கனிமொழிவை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என பதிவிட்டுள்ளார்.


Next Story