முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி: குடும்பத்தினர்-கலெக்டர் பங்கேற்பு
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அவருடைய குடும்பத்தினரும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரம்,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு எனும் இடத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காலை 9 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் சேக்தாவூது, சேக்சலீம், நிஜாமுதீன் மற்றும் குடும்பத்தினர் அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இமாம் அப்துல் ஹமீது தலைமையில் ஜமாத் தலைவர் செய்யது அகமது, செயலாளர் ஆவுல் அன்சாரி, துணை தலைவர் முகமது ஆபிதீன் உள்பட பலர் சிறப்பு தூஆ ஓதி அஞ்சலி செலுத்தினர்.
சப்-கலெக்டர் சுகபுத்ரா, ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜபார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், நகராட்சி ஆணையாளர் ராமர், மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன் மற்றும் கராத்தே பழனிசாமி, சேவியர் ராஜப்பா, முருகேசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அப்துல்கலாம் நினைவிடத்தில் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அப்துல்கலாமின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அப்துல்கலாமின் அண்ணன் முத்து மீரான் லெப்பை மரைக்காயரிடம் நலம் விசாரித்தனர்.
அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் கலந்துகொண்ட 11,000 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகி சேக் சலீம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story