கொளத்தூர், துறைமுகம் பகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவி


கொளத்தூர், துறைமுகம் பகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவி
x
தினத்தந்தி 20 April 2020 4:30 AM IST (Updated: 20 April 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவிகளை வழங்கினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.

அதன்படி துறைமுகம் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 100 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான 20 வகையான மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு குயப்பேட்டையில் 200 மண்பாண்ட தொழிலாளர்களுக்குத் தேவையான 20 அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 10 அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை 200 சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணினி பயிற்சி மேற்கொள்ளும் 200 பயனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், கொளத்தூர் தொகுதி, கிழக்குப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 6 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

அதேபோல், கொளத்தூர் தொகுதி, மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 6 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

அடுத்ததாக, கொளத்தூர் தொகுதியில் உள்ள அருணோதயா ஆதரவற்றோர் இல்லத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட் கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், உதவி கோரியிருந்த இரு பெண்மணிகளுக்கு காய்கறி விற்பனை செய்வதற்கு தள்ளுவண்டியும் வழங்கியதோடு, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசாருக்குத் தேவையான முக கவசங்கள், கிருமி நாசினிகள் (சானிடைசர்) உள்ளிட்ட கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

இதனையடுத்து, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள போர்ட் ஸ்கூல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட முகப்பேர் கிழக்குப் பகுதி வீரமாமுனிவர் சாலையில் கழிவுநீர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 200 பேருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

Next Story