சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் - பா.ம.க. சிறப்பு பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
பா.ம.க. தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றார்.
பூந்தமல்லி,
சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பா.ம.க. தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வரவேற்றார். பொருளாளர் திலகபாமா தீர்மானங்களை வாசித்தார்.
பொதுக்குழுவில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். பா.ம.க.வின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உண்டா?. இல்லையா?. யாருடன் கூட்டணி? என்பதை தேர்தலுக்கு முன்பாக ராமதாஸ் அறிவிப்பார். ஏப்ரல் மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள். தகுதியானவர்களுக்கு சீட் கொடுங்கள். பலமான இடத்தை விட்டு கொடுக்காதீர்கள். மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது.
தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. அதற்கு ஆட்சி அதிகாரம் இருந்தால் எளிதில் செய்து முடிக்க முடியும். வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்ற ஒரே கட்சி பா.ம.க.தான். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு அச்சமும் தேவை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தலை நாம் சந்திக்கப்போகிறோம். வடமாவட்டங்களில் 90 தொகுதிகளில் உள்ள இளைஞர்களை அன்புமணியிடம் ஒப்படையுங்கள். இளைஞர்கள் வேறு கட்சிக்கு போகக்கூடாது
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்களுக்கு என 3 அமைப்புகளை உருவாக்க போகிறேன். தி.மு.க. கூட்டணியில் இருந்து 18 பேர் வெற்றி பெற்றோம். அப்போது வெளியில் இருந்து ஆதரவு மற்றும் ஆலோசனை கொடுத்தோம். அதேபோல்தான் இந்த அரசுக்கும் ஆலோசனை கொடுத்து வருகிறோம். அப்படிதான் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என திட்டமிட்டு செயல்படுங்கள். மனம் இல்லாதவர்கள் விலகி, செயல்படுபவர்களுக்கு வழி விடுங்கள். மிகப்பெரிய இளைஞர் சக்தி நம்மிடம் உள்ளது. அதுவேறு யாரிடமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. நிர்வாகிகள் கே.என்.சேகர், ஆலப்பாக்கம் டில்லிபாபு உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story