5 நாட்களாக நடந்தஆவின் பால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
தமிழகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை,
ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் பால் சப்ளை செய்து வருகிறது. இதற்காக தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால் அதனை புதுப்பிக்க வலியுறுத்தி ஆவின் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 14-ந்தேதி இரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகளும் ஆவின் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆவின் பால் வினியோகிப்பதில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் போராட்டத்தின் 5-வது நாளான நேற்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பிப்பது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரிமையாளர் நல சங்க செயலாளர் வைத்தியநாதன் கூறியதாவது:-
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டெண்டரில் 10 சதவீதம் கூடுதல் தொகையை கேட்ட எங்களை புறக்கணித்து 30 முதல் 40 சதவீதம் கூடுதலாக விலை கொடுத்து பாதுகாப்பாற்ற, விதிகளுக்கு உடன்படாத வகையில் டெண்டரில் சம்பந்தப்படாத வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்தும், டெண்டர் புதுப்பிப்பது தொடர்பாகவும் அமைச்சரை சந்தித்து பேசினோம். அவரது ஆலோசனையை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story