தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை: வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் - தமிழக அரசு புதிய நடைமுறை


தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை: வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் - தமிழக அரசு புதிய நடைமுறை
x
தினத்தந்தி 11 Feb 2020 5:30 AM IST (Updated: 11 Feb 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

சென்னை, 

ஒருவரது சொத்தை இன்னொருவர் கிரையம் முடிக்கும்பட்சத்தில், பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையதளம் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன்மூலம் எந்தவித அலைச்சலும் இல்லாமல் பட்டா மாறுதல் பெற முடியும் என்று கருதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேவேளையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கான சிறந்த நடைமுறையாக இது இருக்கும் என்றும் பொதுமக்கள் கருதினர். ஆனாலும், இணையதளம் மூலம் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று அனைத்து ஆவணங்களின் நகல்களையும் அளிக்க வேண்டியது இருந்தது. அதுமட்டுமல்லாமல் பலமுறை தாலுகா அலுவலகத்துக்கு படையெடுக்க வேண்டிய பழைய நடைமுறைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற சிக்கலை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ளது.

அதாவது, பத்திரப்பதிவு துறையில் தற்போது பயன்படுத்தி வரும் சாப்ட்வேர் மூலம் பட்டா மாறுதல் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவரது சொத்தை இன்னொருவர் கிரையம் முடிக்கும்போதே பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் சாப்ட்வேரில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, ஏற்கனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா?, சர்வே எண், உட்பிரிவு எண், கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக உள்ளதா? வில்லங்கம் ஏதேனும் உள்ளனவா? என்பன போன்று 5 கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட சொத்துக்கான பட்டா, கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் இணையதளம் மூலம் பட்டாவை பெயர் மாற்றம் செய்து புதிதாக கிரையம் முடிப்பவரின் பெயருக்கு பட்டாவை பெயர் மாற்றம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள விவரம் கிரையம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவின் போது அளித்த செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும்.

கிரையம் முடித்தவர்கள் http://ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.

இந்த நடைமுறை உட்பிரிவு செய்யப்பட வேண்டியது இல்லை என்ற சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இதற்கான அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

இதேபோன்ற நடைமுறையை உட்பிரிவு செய்யப்படாத சொத்துகளுக்கும் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story