சேலம் தலைவாசலில் நவீன கால்நடை பூங்காவிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு அருகே கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலக தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைகிறது.
3 பிரிவுகளாக அமைய உள்ள இப்பூங்காவின் முதல் பிரிவில் கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படவுள்ளது. நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை இந்த வளாகத்தில் அமைகின்றன.
உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியின பிரிவுகள், நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்க பிரிவுகளை இந்த வளாகம் கொண்டிருக்கும்.
இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
3வது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன பூங்கா, தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இதுதவிர மரபு திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இதே வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். அவர் தலைவாசல் கால்நடை பூங்கா வளாகத்தில் தெற்காசியாவிலேயே சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். அதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கும் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களையும் இங்கே கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்பின்னர் நாளை (10ந்தேதி) சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கால்நடைகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு கால்நடை கல்லூரிகளில் சேர்வது பற்றி எடுத்துரைக்க பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இங்கே வரவுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் வேளாண்மை துறையின் மூலமாக வேளாண்துறையை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் வரவுள்ளனர்.
பொதுமக்கள் பார்ப்பதற்காக 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கால்நடை மருத்துவ கல்லூரியானது இந்த ஆண்டே தொடங்கப்பட உள்ளது. அதில், முதற்கட்டமாக 40 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
அடிக்கால் நாட்டு நிகழ்ச்சிக்கு பின் முதல் அமைச்சர் பழனிசாமி, முன்னாள் முதல் அமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story