மத்திய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-
மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார தேக்க நிலைமை, கிராமப்புற பொருளாதார வீழ்ச்சி, கிராமப்புற மக்களின் வருவாய், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை இல்லாமல் பா.ஜ.க. விரும்பும் கலாசார திணிப்பை செய்வதாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இருட்டறையில் கருப்பு பூனையை தேடும் வீண் முயற்சியாகவே இருக்கிறது. மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்திய பா.ஜ.க. அரசு, இந்த பட்ஜெட் மூலம் சோஷலிசம் என்ற கருத்தாக்கத்துக்கும் ஆபத்தை நிச்சயப்படுத்தியிருக்கிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை, வளர்ச்சியை, ஏன் தமிழகத்தை அடியோடு புறக்கணித்து சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை விரைந்து செயல்படுத்துவோம் என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டுக்கு தி.மு.க. சார்பில் மன நிறைவின்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.
கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற பொருளாதாரத்தை 10 சதவீத வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறிகளும் பட்ஜெட்டில் இல்லை. கடன் சுமையால் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு இல்லை.
குறைந்தபட்சம் விவசாய கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. சிந்துவெளி நாகரிகத்தை பற்றி குறிப்பிடும்போது சரஸ்வதி பெயரை இணைத்து குறிப்பிட்டது அப்பட்டமான இந்துத்துவா கொள்கையின் வெளிப்பாடாகும். ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
மத்திய அரசின் 16 அம்ச திட்டம் வேளாண் வருமானத்தை பெருக்க விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படாதது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கக்கூடும். கல்வி, சுகாதாரத்துறைக்கான உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்ற பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்களின் பண்டைய கலாசாரத்தை உலகம் அறிந்துகொள்ள வழிவகுக்கும். எல்.ஐ.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு ஆபத்தானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
நடப்பு நிதி ஆண்டில் 4.8 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. வேளாண்துறை வளர்ச்சிக்காக 15 அம்ச திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமான கடன் சுமைக்கு நிரந்தர தீர்வோ, விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்போ இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதை தவிர பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க கூறுகள் எதுவும் இல்லை.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், ஜி.டி.பி. ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் பெரும் எதிர்ப்புகளுக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் கடனுக்காக ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையவிருப்பது தமிழர் வரலாற்றை அறிய உதவும். இந்த பட்ஜெட் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். அதேவேளையில் எல்.ஐ.சி., ஐ.டி.பி.ஐ. பங்குகளை விற்பதற்கான அரசின் அறிவிப்பை ஏற்கமுடியாது.
கே.பாலகிருஷ்ணன்
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்ற அறிவிப்பு பொதுத்துறைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கையாகும். பொருளாதார மந்தநிலை, உற்பத்தி பாதிப்பு, தொழிற்சாலைகள் முடக்கம், வேலையின்மை அதிகரிப்பு போன்ற நெருக்கடிகளை போக்குவதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை.
மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மொத்தத்தில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பரிசளிப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்:-
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.
எம்.எஸ்.சுவாமிநாதன்:-
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்:-
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கு விரிவான திட்டங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, கிடைக்கும் வளங்களை வைத்து என்ன செய்யவேண்டும் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. விவசாயம் பெரும்பான்மையானவர்களுக்கு தொழிலாளாக இருக்கும் சூழலில், இது முக்கியமாகும்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், எச்.வசந்தகுமார் எம்.பி., டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோரும் பட்ஜெட் குறித்து கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
தொழில் மற்றும் வர்த்தக சபை
மேலும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஷரத்குமார் சராப், தென் மண்டல தலைவர் இஷ்ரார் அகமது, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் சதீஷ் மகர், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய தொழில் கூட்டமைப்பின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் சிட்டிக்கான தேசிய குழு இணை தலைவர் அமித் கோசைன், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் பி.ஜி.சத்குரு தாஸ், சென்னை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் டி.வி.அரிகரன் ஆகியோரும் பட்ஜெட் குறித்து தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story