வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு புதிய வசதி உழவன் செயலியில் கூடுதல் சேவை அறிமுகம்

தமிழகத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்த புதிய வசதியாக உழவன் செயலியில் கூடுதல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய தகவல்களைத் தருவதற்காக கடந்த ஆண்டு “உழவன்” செல்போன் செயலி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5 லட்சம் பயனாளிகள் இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
3 சேவைகள்
உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது கூடுதலாக எனது பண்ணை வழிகாட்டி, இயற்கைப் பண்ணையம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற மூன்று சேவைகள், உழவன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சேவையின் மூலம், விவசாயிகள் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ள பயிர், பரப்பு, நடவு நாள் மற்றும் சாகுபடி முறையை தேர்வு செய்து, விதைப்பு முதல் அறுவடை வரை தினசரி விவசாயிகள் அந்த பயிருக்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து சாகுபடி முறைகளையும் எளிதில் அறிந்து கொள்ளமுடியும்.
இயற்கை பண்ணையம்
சாகுபடிக்கு தேவைப்படும் விதை, ரசாயன உரங்கள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள் இருப்பு பற்றிய விவரத்தையும், பயிர்க்கடன், அந்த பயிரை காப்பீடு செய்வதற்கு, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத்தொகை, காப்பீட்டுக்கான காலக்கெடு ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம். அறுவடை செய்த விளைபொருட்களுக்கான சந்தை நிலவரத்தை அறிந்து, அதற்கேற்ப விற்பனை செய்து கொள்ளலாம்.
இயற்கைப் பண்ணைய முறையை மற்ற விவசாயிகளும், விற்பனையாளர்களும் தெரிந்துகொள்வதற்காக, உழவன் செயலியில் பயிர் வாரியாக இயற்கைப் பண்ணைய விவசாயிகள் பெயர், விற்பனையாளர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது இயற்கை பண்ணைய விவசாயிகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்கும்.
சந்தைப்படுத்த உதவும்
நபார்டு போன்ற நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்பட தமிழ்நாட்டில் தற்போது 500 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விளைபொருட்களை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஒருங்கிணைத்து, சுத்தப்படுத்தி, தரம் பிரித்து, மதிப்பு கூட்டி, சிப்பம் கட்டி, தர அடையாளத்துடன் சந்தையில் விற்று வருகின்றனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை நல்ல முறையில் சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உழவன் செயலியில் புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story