சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டேனியல் செல்வராஜ் மரணம்
சாகித்ய அகாடமி விருது பெற்றவரான எழுத்தாளர் டேனியல் செல்வராஜ் காலமானார்.
திண்டுக்கல்,
நெல்லை மாவட்டம் தென்கலம் என்னும் ஊரில் கடந்த 1938-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி பிறந்தவர் டேனியல் செல்வராஜ். தமிழில் சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
பொதுவுடைமை கொள்கையில் பிடிப்புடையவரான செல்வராஜ், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் வகையில் தோல் என்ற நாவலை எழுதினார்.
இவரது தோல் என்ற படைப்பினை, தமிழ்நாடு அரசு 2010-ம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்தது. அப்பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா இவருக்கு பரிசு வழங்கினார்.
தோல் என்ற நாவலுக்காக 2012-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஓர் எழுத்தாளராக 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள் உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
சமீப காலங்களில் திண்டுக்கல்லில் வசித்து வந்த செல்வராஜ் உடல்நலக் குறைவால் வாடினார். இந்நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
Related Tags :
Next Story