வேலூர் ஜெயிலில் உள்ள முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி வழங்க வேண்டும் சிறைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முருகனை அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது உறவினர் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘முருகனை சந்திக்க யாரையும் சிறை அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை.
அவரை தனிமை சிறையில் அடைத்து மனநலம் பாதிக்க வைக்கின்றனர். இதனால் அவர் சாப்பிடாமல் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார். எனவே, முருகனை சந்திக்க அவரது மனைவி நளனிக்கும், உறவினர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘வேலூர் சிறை வளாகத்தில் சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முருகன் அறையில் இருந்து செல்போன், சார்ஜர் போன்ற தடை செய்யப்பட்ட 13 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறை நடத்தை விதிகளை மீறியதால், சிறை விதிகளின்படி 3 மாதத்துக்கு அவர் தனது மனைவி உள்ளிட்ட வேறு யாரையும் சந்திக்க முடியாதபடி குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது. வக்கீல்கள் மட்டும் எப்போதும்போல அவரை சந்திக்கலாம். அதேபோல அவர் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை.
அனைத்து வசதிகளும் உண்டு
தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகத்தில் மொபைல் போனில் பேசமுடியாதபடி ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து வசதிகளும் அங்கும் உண்டு. அந்த சிறைப்பகுதியில் முருகன் மட்டுமின்றி மேலும் 13 பேர் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘முருகனை அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். தற்போது முருகன் நிர்வாக காரணங்களுக்காக சிறைக்குள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அதில் தலையிட முடியாது.
அறிவுரை வழங்க வேண்டும்
அவருக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனையை சிறைத்துறை அதிகாரிகள் தளர்த்திக்கொள்ள வேண்டும். அதேபோல முருகன் இனி சிறைக்குள் இதுபோல உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என அவருக்கு அவரது வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கவேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story