தொழிலாளர் துறை உதவி இயக்குனர், பொறியாளர் பதவி: மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 7 பேர் தேர்வு சைதை துரைசாமி அறிவிப்பு


தொழிலாளர் துறை உதவி இயக்குனர், பொறியாளர் பதவி: மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 7 பேர் தேர்வு சைதை துரைசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2019 3:49 AM IST (Updated: 19 Sept 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் துறை உதவி இயக்குனர், தொழில்கள் துறை உதவி பொறியாளர் பதவிக்கான நேர்முக தேர்வில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் துறையில் முதல்வர்/ உதவி இயக்குனர் பதவிக்கான (பயிற்சி) 9 காலி பணி இடங்கள், தொழில்கள் துறையில் 32 உதவி பொறியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட பணிமனை அல்லது ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் முதல்வர்/ உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வையும், 6 மாதம் அனுபவம் உள்ளவர்கள் உதவி பொறியாளர் பதவிக்கான தேர்வையும் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தேர்வு முடிவு கடந்த மே மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற்றது.

7 பேர் தேர்வு

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேய மையத்தில் நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. நேர்முக தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நேர்முக தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 7 பேர் வெற்றி வாகை சூடி உள்ளனர். இதில் தொழிலாளர் துறையில் முதல்வர்/ உதவி இயக்குனர் பதவிக்கு கே.அன்புசெல்வி, என்.பிரேம்குமார், ஏ.எஸ்.பிரியதர்ஷினி ஆகிய 3 பேரும், தொழில்கள் துறையில் உதவி பொறியாளர் பதவிக்கு கே.கீர்த்திகா, ஜெ.மலர், யு.பிரதீப், சி.வினோத்குமார் ஆகிய 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாழ்த்து

தேர்வில் வெற்றி பெற்று, அரசு பணியில் பதவி கிடைத்த 7 பேரும் மனிதநேய மையத்தின் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேற்கண்ட தகவல் மனிதநேய மையத்தின் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story