மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணம் வாங்கிக்கொண்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணம் வாங்கிக்கொண்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2019 3:45 AM IST (Updated: 31 Aug 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

பணம் வாங்கிக்கொண்டு பட்டங்கள் வழங்கப்படுவதால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மானியக்குழு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வாணி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) பணிக்கு விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து தனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் பட்டப்படிப்பை 2 ஆண்டுகள் படித்தேன். 3-வது ஆண்டில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் 3-ம் ஆண்டு பி.ஏ. வரலாறு பட்டப்படிப்பை முடித்தேன். பின்னர் எம்.ஏ. வரலாறு, பி.எட்., படிப்புகளையும் நிறைவு செய்தேன். என்னுடைய பி.ஏ. வரலாறு பட்டப்படிப்பு செல்லாது என்று கூறி என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். அதை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

அங்கீகரிக்கப்படாத கல்வி முறை

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணம் வாங்கிக்கொண்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் முதல் 2 ஆண்டுகள் ஒரு படிப்பையும், 3-வது ஆண்டில் இன்னொரு படிப்பையும் ஒருவரால் எப்படி படிக்க முடியும்? இந்த கல்வி முறை பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரிக்காத முறையாகும்.

மானியக்குழுவுக்கு உத்தரவு

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது மானியக்குழு ஆய்வு நடத்தி இருக்க வேண்டும். மானியக்குழு இதை செய்ய தவறிவிட்டது. இதனால் பல்கலைக்கழக மானியக்குழு மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் ஆய்வு நடத்தி முறைகேடாக பட்டங்கள் வழங்கியதற்கு பொறுப்பானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story