திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சத்தில் மணிமண்டபம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்


திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சத்தில் மணிமண்டபம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 10:45 PM GMT (Updated: 20 July 2019 9:16 PM GMT)

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் அவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்

தமிழ்த்திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் எம்.கே.டி. எனவும் அன்புடன் அழைக்கப்படுபவர் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். அன்பும், அடக்கமும், எளிமையும் மிகுந்த தியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. தியாகராஜ பாகவதர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.

இவர் நடித்த ஹரிதாஸ் என்னும் திரைப்படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரியவர். தியாகராஜ பாகவதரின் இசைவளம் செறிந்த குரல், அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. இவருடைய கர்நாடக சங்கீத பாடல்கள் அன்றும், இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது. இவர் பல வெற்றிப்படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர்.

திரைப்படத்துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் தியாகராஜ பாகவதர் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், திருச்சி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் எம்.கே.தியாகராஜ பாகவதர் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தமிழக அரசு அமைக்கும்.

திருக்குறளின் பெருமை

வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வந்த ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசும், இது வரை 149 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகை வழங்கியுள்ளது. அவ்வரிசையில் இவ்வாண்டு, உளுந்தூர் பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசு, இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டித ம.கோபால கிருஷ்ணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

வாரணாசி இந்து பல்கலைக்கழகம், கவுகாத்தி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும். உலக அற இலக்கியமான திருக்குறளின் பெருமையை பரவச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மொழி பெயர்ப்பு

இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட ஐரோப்பிய தமிழறிஞர் டாக்டர் ராபர்ட் கால்டுவெல்லின் சீரிய தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில், அன்னாரின் நெறியில் ஒப்பிலக்கண ஆய்வில் தமிழறிஞர்களையும், மாணவர்களையும் நெறிப்படுத்தவும், திராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாக பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளவும், தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும். இதற்கென வைப்புத் தொகையாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித்திட்டத்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப்பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story