கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் நெம்மேலி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் நெம்மேலி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2019 5:45 AM IST (Updated: 28 Jun 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெம்மேலி திட்ட அடிக்கல் நாட்டு விழாவின்போது பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னையை அடுத்த பேரூரில் ரூ.6,078 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார்.

சென்னை, 

சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

நெம்மேலியில் அடிக்கல் நாட்டு விழா

சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,259 கோடியே 38 லட்சம் மதிப்பில் தினசரி 15 கோடி லிட்டர் சுத்தி கரிப்பு திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி, செங்கலை எடுத்து கொடுத்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அனைவரும், மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நெம்மேலியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

15 கோடி லிட்டர்

அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்தபோது, சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் சென்னை மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நெம்மேலியில் 15 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தம் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு இன்று (நேற்று) இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. அதுமட்டும் அல்லாது ஜெயலலிதா பேரூரில் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் மற்றொரு திட்டத்தையும் அறிவித்தார். அந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரும் 2021-ம் ஆண்டில் இந்த பணிகள் நிறைவு பெற்று, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் நிறைவேற்றப்படும்போது, சென்னை மாநகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

புதிய நிலையங்களுக்கு ஆய்வு

அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழக கடலோர மாவட்டங்களில் இதே போன்று கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- தமிழகத்தில் வறட்சியான கடலோர மாவட்ட பகுதிகளில், கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலமாக, பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

கேள்வி:- குடிநீர் பணிகளுக் காக மத்திய அரசிடம் ஏதாவது நிதி கோரியிருக்கிறீர்களா?

பதில்:- ஏற்கனவே வறட்சிக்கு தேவையான நிதி கேட்டு இருக்கிறோம்.

2 வாரத்தில் ரெயிலில் தண்ணீர்

கேள்வி:- ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் எப்போது வழங்கப்படும்?

பதில்:- இரண்டு வாரத்திற்குள் அந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும். தற்போது நிலவுகின்ற வறட்சியினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை முழுமையாக தீர்ப்பதற்காக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.200 கோடி கூடுதலாகவும், ஜோலார்பேட்டையிலிருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவதற்கு ரூ.65 கோடியும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு, அதற் கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

ரூ.6,078 கோடியில் புதிய திட்டம்

சென்னையை அடுத்த பேரூரில் நிறைவேற்றப்பட இருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தை பொறுத்தவரை, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அப்பொழுது ரூ.4 ஆயிரத்து 70 கோடியே 67 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.4 ஆயிரத்து 267 கோடியே 70 லட்சம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது, எஞ்சிய தொகையான ரூ.1810.70 கோடி தமிழக அரசின் மூலம் இந்த திட்டத்திற்கு நிதி ஆதாரம் வழங்கப்படும்.

மழைநீர் சேகரிப்பு திட்டம்

கேள்வி:- கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் எவ்வளவு மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்?

பதில்:- தற்போது 21 கோடி லிட்டர் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது 15 கோடி லிட்டர் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. விரைவாக, துரிதமாக மத்திய அரசிடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டி இருக்கிறது. அந்த அனுமதிகள் பெற்றவுடன் 40 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டமும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, சென்னை மாநகர மக்களுக்கு பிரச்சினை இன்றி என்றைக்கும் குடிநீர் வழங்கப்படும்.

கேள்வி:- மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்களா?

பதில்:- ஒட்டுமொத்த தமிழக மக்களே மழை நீர் சேகரிப்புக்கு ஆர்வத்தோடு முன்வந்து திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலே பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் ஏற்படுத்தி வருகின்றோம்.

கேள்வி:- கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சமன் செய்ய என்ன திட்டங்கள் இருக்கின்றன?

பதில்:- கடல்நீரை குடி நீராக்கும் நிலையத்தால் எந்த சுற்றுச்சூழல் மாசும் ஏற்படவில்லை. அத்துடன் கடல் அரிப்பும் ஏற்படாது. கடல் தண்ணீர் தானாக வருகிறது. அதை எடுத்து பயன்படுத்துகிறோம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

காவிரி நீர்

கேள்வி:- காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீர் பெற தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

பதில்:- இதில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. கர்நாடக அரசு, மாதவாரியாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பிலே குறிப்பிட்டு இருக்கிறது. ஆணையமும் அதை வலியுறுத்தி கூறி உள்ளது. டெல்டா பாசன விவசாயிகளுக்கு மாதாந்திர அடிப்படையிலே வழங்கக்கூடிய நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கர்நாடக அரசும் தண்ணீரை வழங்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து வருகிறது. அவர்கள் தெரிவித்துள்ள சில கருத்துகளுக்கு நாம் மறுப்பு தெரிவித்து இருக்கிறோம். உரிய தண்ணீரை வழங்கினால் தான் குறிப்பிட்ட காலத்தில் விவசாயிகள் பயிர் நடவு செய்ய முடியும் என்று கர்நாடகத்தை வலியுறுத்தி இருக்கிறோம்.

மேகதாது அணை

கேள்வி:- மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று நீங்களும் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளர்கள். இருந்தபோதும் திட்டப்பணிகளை தொடங்கி இருக்கிறார்களே?

பதில்:- திட்டப்பணிகள் தொடங்கியுள்ளார்கள் என்பது தவறான செய்தி. எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு தெளிவாக சொல்லியிருக்கின்றது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழகத்துக்கு நன்மை பயக்கக் கூடிய திட்டத்தைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். தமிழகத்தை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். தமிழக விவசாயிகளுக்கு தேவையான நீரை பெற்றுத்தருவதுதான் இந்த அரசின் முதல் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story