பெண் அதிகாரி வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம்: சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு

சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நேற்று ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காதல் பிரச்சினையில் கூட்டுறவு பெண் அதிகாரி தேன்மொழியை (வயது 26), சுரேந்தர் (27) என்பவர் அரிவாளால் வெட்டி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கொலை முயற்சி நடந்த இடத்தை ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழி மற்றும் சுரேந்தரையும் பார்வையிட்டார்.
அப்போது அவருடன் ரெயில்வே சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால், துணை சூப்பிரண்டு எட்வர்ட், இன்ஸ்பெக்டர் வைரவன் ஆகியோர் சென்றனர்.
ஆய்வுக்கு பின் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தேன்மொழி தற்பொழுது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுரேந்தரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அவர் கள் இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னரே இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சுவாதி கொலை சம்பவத்துக்கு பின்னர், தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்டிரல், கோவை, மதுரை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அதிகளவில் பொருத்தப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. கூடிய விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி முழுமையாக முடிக்கப்படும். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story