அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து காலம் தான் முடிவு செய்யும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து காலம் தான் முடிவு செய்யும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2019 5:17 AM IST (Updated: 11 Jun 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து காலம் தான் முடிவு செய்யும் என்றும், கட்சியில் பிளவு இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய 3 வாகனங்கள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.97 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதற்கு அ.தி.மு.க. வினர் கட்டுப்பட வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் கூறியது போல் 100 ஆண்டுகள் ஆட்சி நிலைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஒற்றை தலைமை குறித்து காலம் தான் முடிவு செய்யும். கட்சியில் பிளவு ஏற்படாதா? என்று எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடி வருகின்றனர். அ.தி.மு.க. வில் எந்த பிளவும் இல்லை.

அ.ம.மு.க. காணாமல் போய் விட்டது. அது ஒரு ‘லெட்டர் பேடு’ கட்சி. கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைப்பது நிறை வேறாத கனவு.

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட மாவட்ட செயலாளர் என்ற முறையில் ராஜன் செல்லப்பாவுக்கு அதிகாரம் உண்டு. இதற்காக அவர் கட்சியை மதிக்கவில்லை என்று கூற முடியாது. நாளை (புதன்கிழமை) அமைதியான முறையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். கட்சி நல்லபடியாக செல்லும். உழைத்தால் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். அமைச்சரவையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் நிகழாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story