பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை


பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறாதது குறித்தும் பல கற்பனையான கதைகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

சென்னை,

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறாதது குறித்தும் பல கற்பனையான கதைகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. எந்த அனுமானத்திற்கும் பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம். அ.தி.மு.க. ஒரு ஜென்டில்மேன் கட்சி. எனவே ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் பா.ம.க.வுக்கு மேல்சபை சீட் வழங்குவது தொடர்பான அ.தி.மு.க. நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.

நாங்கள் தி.மு.க. போல இங்கு ஒரு காலும், அங்கு ஒரு காலும் வைத்துக்கொண்டு இரட்டை சவாரி செய்ய மாட்டோம். மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறுவது தொடர்பான அழைப்பு வரும் பட்சத்தில் அது குறித்தான முடிவை கட்சி தலைமை எடுக்கும். மற்றவகையில் கற்பனையான பேச்சுகளுக்கு பதில் கூறுவது கடினம். இதை புறக்கணிப்பு என்று சொல்லிவிடமுடியாது. தற்போது உள்ள சூழ்நிலையில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் ஒரு முழுமையான வெற்றி பெற்றிருக்கிறது. ஒருவேளை அக்கட்சி வெறும் 273 சீட்டுகள் மட்டும் பெற்று அதில் அ.தி.மு.க.வும் ஆதரவு தந்து ஒரு நிலைப்பாடு இருக்கும் பட்சத்தில் புறக்கணிப்பு என்ற வார்த்தை நியாயமாக படலாம். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. நேற்று அழைப்பு வரவில்லை. நாளை அழைப்பு வரலாம். நாளை மறுநாளும் அழைப்பு வரலாம். அதுவரை அனுமானங்களுக்கு பதில் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story