நாடாளுமன்ற தேர்தலில் ‘எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்’ அமைச்சர் தங்கமணி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் ‘எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்’ அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2019 2:00 AM IST (Updated: 3 Jun 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருப்பதாக ஒரு பத்திரிகையில் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2015-ம் ஆண்டு மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினார். அதில் இருந்து மின்வெட்டு இல்லாத மாநிலமாக, ஏன் மின்மிகை மாநிலமாக தமிழகத்தை வைத்திருக்கிறோம்.

தொழிற்சாலைகளில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல், ஜெனரேட்டர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

கடந்த மாதம் 27-ந் தேதி காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக திடீரென குறைந்துவிட்டது. அதனால் தொழிற்சாலைகளில் அன்று மட்டும் 4 மணி நேரம் ஜெனரேட்டரை பயன்படுத்துமாறு கூறி இருந்தோம். அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கிய பிறகு தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம்.

மழை பெய்யும்போதும், காற்று வீசும்போதும் மட்டும் பாதிப்புகள் இருந்தால் மின்தடை ஏற்படுகிறது. அப்போதும், மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கு தேவையான மின்சாரம் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு ஆண்டாக ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த 10 நாட்களாக அங்கு மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து 800 மெகாவாட் மின்சாரம் கிடைத்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால் அனல் மின்நிலையத்தை பராமரிப்பு பணிக்காக தற்போது நிறுத்தி வைத்திருக்கிறோம். மின்சாரம் பற்றாக்குறை என்று பொதுமக்களிடையே பீதியை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறார்கள்.

எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. கல்வி கடனை ரத்து செய்வோம் உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டுமென்பதால்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story