சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க வாலாஜா ஏரியில் இருந்து 14 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வாலாஜா ஏரியில் இருந்து 14 கன அடி தண்ணீர் எடுத்து அனுப்பப்படுகிறது.
வடலூர்,
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சமாளிக்க கடந்த மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. இதன் காரணமாக ஏரியில் இருந்து வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் ஏரியின் நீர் மட்டம் 44.90 அடியாக இருந்தது. அது நேற்று 44.89 அடியாக குறைந்தது. ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
38 கன அடி
நேற்று முன்தினம் சென்னைக்கு வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று அது 38 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வரும் தண்ணீரை கூடுதலாக சென்னைக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சேத்தியாதோப்பு அருகே வாலாஜா ஏரியில் நிரப்பப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் பரவனாற்றுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வடக்குத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
ஆழ்துளை கிணறுகள்
பின்னர் அங்கிருந்து வீராணம் குழாய் மூலம் வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 5.5 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரியில் தற்போது 5 அடி தண்ணீர் உள்ளது.
மேலும் சேத்தியாதோப்பில் இருந்து பண்ருட்டி வரை உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வினாடிக்கு 18 கனஅடி வீதம், வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வீராணம் ஏரி, வாலாஜா ஏரி மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நேற்று வினாடிக்கு மொத்தம் 70 கனஅடி தண்ணீர் கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story