உள்ளாட்சி தேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? -அமைச்சர் ஜெயக்குமார் பதில்


உள்ளாட்சி தேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? -அமைச்சர் ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 24 May 2019 5:13 PM IST (Updated: 24 May 2019 5:13 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

சென்னை,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்ற சுமார் 90 கோடி வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.

மகத்தான இந்த தேர்தல் முடிவை இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது.

அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி.மு.க. தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில்  இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்று விட்டது. அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா?

வாக்காளர்களால் ஏற்று கொள்ள முடியாத நபர் தினகரன். திமுக பெற்ற  வெற்றியால் எந்த பலனும் இல்லை. ஸ்டாலின் முதல்வர் கனவு எப்போதும் பலிக்காது என்பதற்கு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து மக்களை சந்தித்து 2021-க்கு பிறகும் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். இனிவரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். கொள்கை முடிவு என்பதால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவுசெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story