‘என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி
‘என்னை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
ஆலந்தூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகத்தின் பல இடங்களில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டது.
இந்தநிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தவறானது கிடையாது
தேர்தல் பிரசாரத்தில் நான் சொன்ன கருத்து தவறானது கிடையாது. பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. திடீரென அவர்களின் தேவைக்காக பிரச்சினை செய்வது போல் தோன்றுகிறது. இதுபற்றி பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலின்போதும் ஏற்கனவே பேசி இருக்கிறேன்.
அப்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நம்பிக்கை குறைந்ததும் கிடைத்ததை பிடித்துக்கொண்டு விவாதம் செய்கின்றனர்.
சரித்திரம் பதில் சொல்லும்
ஏற்கனவே மெரினாவில் இதே கருத்தை பேசும்போது எல்லா இனத்தினரும், மதத்தினரும் இருந்தனர். இந்த விவகாரத்தில் 3 நாட்கள் எந்த பதற்றமும் உருவாகவில்லை. பதற்றத்தை உருவாக்கினார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு. பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் ஞானம் உள்ளவர் என்று கூறுகின்றனர். அவருக்கு பதில் சொல்ல சரித்திரமும், சரித்திர ஆசிரியர்களும் உள்ளனர்.
தமிழிசை மீது தாக்குதல் நடக்கவில்லை. என்னை குறை சொல்லும் போது நானும் நடந்த குறையை சொல்ல வேண்டியது இருந்தது. ஒரு வீடியோவில், தலையையும், வாலையும் கத்தரித்து வெளியிட்டால் யாரும், யாரையும் திட்டுவதுபோல் சித்தரித்துவிட முடியும். அதை முழுவதுமாக பார்க்க சகிக்காதவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
பதற்றம் அதிகரிக்கும்
கட்சித்தலைவர்கள், தேர்தல் பிரசாரம் செய்பவர்கள் இனி இதைப்பற்றி பேசக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அதில் சில மடத்தின் தலைவர்களுக்கு விதி விலக்கு இருக்கிறது என நினைக்கிறேன். ஓரிரு மடத்தின் தலைவர்கள் பேசி இருக்கிறார்கள். நாங்கள் அமைதியை காக்க எல்லா வேலையும் செய்கிறோம்.
தி.மு.க.வுக்கு செயல்திட்டம் இருப்பதால் ஆதரிக்காமல் இருக்கலாம். நாங்கள் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டோம். நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை. தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஆவல்தான் உள்ளது. கைது செய்யட்டும் எனக்கு ஒன்றும் இல்லை. என்னை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும். என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது. இது வேண்டுகோள் அல்ல அறிவுரை.
அனைத்து மதத்தினருடன் நெருக்கம்
திரையுலக நண்பர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். இது ஜனநாயக நாடு. காந்தியை பற்றி நல்ல விஷயங்கள் வெளியே வருகிறது. எனவே சரித்திரத்தை நினைவு கொள்வது நல்லது. என்னை பணி செய்யவிடாமல் அரசியல் குறுக்கீடு இருக்கிறது. சூலூர் தொகுதியில் இறுதி நாள் பிரசாரம் செய்யவேண்டிய நிலையில் பதற்றமான சூழல் இருப்பதாக காரணம் காட்டி தடை செய்துள்ளனர்.
பதற்றமான சூழல் இருக்கும்போது ஏன் சூலூர் தொகுதி தேர்தலை தள்ளி போடக்கூடாது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு, அவரது குணாதிசயத்தை தான் காட்டுகிறது. அவர் கருத்துக்கு நான் என்ன சொல்ல முடியும். எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர். அனைத்து மதத்தினருடன் நான் நெருங்கி உள்ளேன். மே 23-ந்தேதி காங்கிரஸ் நடத்தும் கூட்டத்துக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்ததா? என்றும் தெரியவில்லை.
இந்துக்கள் யார்?
எனக்கு எதிராக பல்வேறு கட்டங்களில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவை எல்லாம் சரியான போராட்டங்கள் இல்லை என்பது பின்னர் புரிந்தது. இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். மொத்தமாக சொல்லக்கூடாது.
அரசியலில் இல்லாதவர்கள் என்ன இப்படி பேசிவிட்டாரே என்று சிறிது நேரம் நினைப்பார்கள். புண்படுவது, கோபப்படுவது, தாக்குவது போன்றவற்றை தனிப்பட்ட அரசியலுக்காக சிலர் எடுத்துள்ளனர்.
நல்ல பாதுகாப்பு இருந்தது. மீறி செய்ய வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். பெரிய கூட்டம் போராட்டம் செய்வதாக இருந்தால் பதற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 2 அல்லது 4 பேர் தான் போராட்டம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story