கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு: கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு


கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு: கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 17 May 2019 1:53 PM IST (Updated: 17 May 2019 1:53 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது.

மீதம் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்களும், வேட்பாளர்களும் மும்முரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

4 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் அனல்பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

மாலையில் பிரசாரம் நிறைவுபெற்றதும், தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு ஆகிய தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணியில் 1300 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 15,939 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் உள்ளதால்  ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அரவக்குறிச்சியில் 250 ஓட்டுச்சாவடிகள், திருப்பரங்குன்றத்தில் 297, சூலுாரில் 329 மற்றும் ஒட்டப்பிடாரத்தில் 291 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

அரவக்குறிச்சி தொகுதியில் கமலஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி தரும் அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். 

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் இன்று மாலை முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவு நடக்கும் 13 வாக்குச்சவடிகள் உள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை ரூ.156.86 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தான் திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டுச்செல்லப்பட்டன. திருவள்ளூரில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதுவும் கொண்டு செல்லப்படவில்லை. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெயர் எம்.பி.யுடன் இருந்த கல்வெட்டு பற்றி புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story