மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி தாக்கு


மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி தாக்கு
x
தினத்தந்தி 13 May 2019 5:00 AM IST (Updated: 13 May 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார் என்று ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது கட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சிலரது சூழ்ச்சியால் இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். உங்களுக்காக உருவாக் கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை கட்டிக்காத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

ஆனால் சிலர் வேண்டுமென்றே ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று துடிக்கின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க. தான் விலாசம் கொடுத்தது. இரட்டை இலை சின்னம் தான் அவருக்கு தகுதியை பெற்றுக்கொடுத்தது. அதே இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்படிக்கை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அந்த நெருக்கடியில் இருந்து நீங்கள் காப்பாற்ற வேண்டும்.

நான் தொண்டனாக இருந்துதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நீங்கள் போடும் கட்டளையை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைவர் என்ற கர்வம் பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறார். டி.டி.வி.தினகரன் எப்படியாவது கட்சியை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து ஆதாயம் தேட வேண்டும் என்று துடிக்கிறார்.

மதுரையில் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நான் சிவப்பாக இருக்கிறேன். கவர்ச்சியாக இருக்கிறேன். தற்போது 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ததால் கருப்பாகிவிட்டதாக மக்களிடம் பேசுகிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள்? இங்கு இருக்கும் மக்கள் மழையை பொருட்படுத்தாமல், வெயிலை பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் உழைத்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படிப்பட்ட மக்களை சிந்தித்து பார்த்தாரா?

4 நாட்கள் வெயிலில் சென்றாலே கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருக்கிறார்கள். 26 நாட்கள் தொடர்ந்து காலை முதல் மாலை வரை அனைத்து பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தேன். உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன். பொதுமக்களும் உச்சி வெயிலை பொருட்படுத்தாமல் அந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் மு.க.ஸ்டாலின். அவரால் 4 நாட்கள் வெயிலை தாங்க முடியவில்லை. இவரை 40 நாள் வெயிலில் போட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடுவார்.

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சி அ.தி. மு.க., மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் இயக்கம் அ.தி. மு.க., ஸ்டாலின் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்போம் என்கிறார். அவர்கள் குடும்பத்திடம் உள்ள டி.வி. சேனல்களின் கட்டணத்தை குறைக்கட்டும். மு.க.ஸ்டாலின் குடும்பமும், தயாநிதி மாறன் குடும்பமும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளது. நாங்கள் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆனால் தி.மு.க. தலைவர் அனைத்தையும் நிறைவேற்றுவது போன்று பச்சைப்பொய் பேசுகிறார். அதனை எப்படி நடைமுறைப்படுத்த முடியும். இது இடைத்தேர்தல். ஆட்சியில் இருந்தால் தானே நிறைவேற்ற முடியும். ஓட்டுகளை பெறுவதற்காக அரசியல் நாடகம் ஆடும் தலைவர் மு.க.ஸ்டாலின்.

கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க மத்திய அரசிடம் பேசி, தற்போது உள்ள கட்டணமான ரூ.100-க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story