4 தொகுதி இடைத்தேர்தல்: வெற்றிக் கோப்பையுடன் வரும் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம்


4 தொகுதி இடைத்தேர்தல்: வெற்றிக் கோப்பையுடன் வரும் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 11 May 2019 5:15 AM IST (Updated: 11 May 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

4 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கோப்பையுடன் வரும் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காலனால் வரவழைக்கப்பட்டது என்றாலும், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களோ அ.தி.மு.க.வுக்கு துரோகம் இழைத்தவர்களால், சுயநலவாதிகளின் தனிப்பட்ட லாபத்திற்காக திணிக்கப்பட்ட இடைத்தேர்தலே. ஆர்.கே.நகர் தொடங்கி நடந்து முடிந்த தேர்தல் வரை விரோதத்தோடு துரோகமும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு கட்சியை அழிக்க கங்கணம்கட்டி நின்ற நிலையில், இந்த 4 தொகுதி இடைத்தேர்தலிலோ தங்களது முகமூடியையும் கிழித்துவிட்டு தி.மு.க.வும், அ.ம.மு.க.வும், அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம் என்கிற ஒருமித்த குரலோடு நம் முன்னே நிற்கின்றார்கள்.

இந்த சூழலில் விரோதத்தையும், துரோகத்தையும் வென்றுகாட்டி, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் ஒருநாளும் காலூன்றி நிலைத்ததில்லை என்பதனை மீண்டும் ஒருமுறை தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறித்திட நாம் கொள்கை ஆயுதம் ஏந்தி நிற்கிறோம்.

மலைகொண்ட குன்றம் திருப்பரங்குன்றம், அது எப்போதும் இலை கொண்ட இயக்கத்தின் மன்றம் என்பதை இன்னொரு முறை எடுத்து இயம்பிடவும்; அரவக்குறிச்சி அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை முன்மொழியும் ஈரிலை இயக்கத்தின் எழுச்சி என்பதை எடுத்துச்சொல்லிடவும்; சூலூர் சட்டமன்றத் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்பதை சூளுரைத்துக் காட்டவும்;

ஓட்டப்பிடாரம், அ.தி.மு.க.வின் வெற்றித் தேரோட்டம் நடத்துகின்ற ஓட்டப்பிடாரம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவும் தொண்டர்கள் அலை அலையாய்த் திரண்டு, உண்ணாது உழைத்து, உறங்காது விழித்து, அயராது ஆற்றிவரும் தொண்டினை நினைத்து, என்ன தவம் செய்தோம் இவர்களை தொண்டர்களாக பெறவே என்று நெஞ்சம் நெகிழும் வண்ணம் நீங்கள் ஆற்றிவரும் அயராத தொண்டிற்கு நாங்கள் மீண்டும், மீண்டும் தலைவணக்கம் செய்கின்றோம்.

தி.மு.க., காங்கிரஸ் இனத்துரோக ஆட்சி பறித்திட்ட ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டுத்தந்து, உட்கட்டமைப்பில், சுகாதாரத்தில், உள்நாட்டு, அயல்நாட்டு சுற்றுலாவில், உலகத்தர கல்வியில், ஆவின் பால் அயல்நாடு பறக்கும் அளவுக்கு வித்திட்ட வெண்மை புரட்சி என இந்திய தேசமே பாராட்டும் வகையிலும், இன்ன பிறமாநிலங்களும் நம்மை இன்முகத்தோடு பின்பற்றும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெறும் வகையில் நாம் தொடர்ந்து நடத்திவரும் ஜெயலலிதாவின் நல்லரசை, அழிப்போம், கலைப்போம் என்று கொக்கரிக்கின்ற கயமையை வேரோடு வீழ்த்திட, நடைபெற இருக்கின்ற 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையே உலகம் விழிவிரித்துப் பார்க்கும் வண்ணம் வாகை சூடியது என்கிற வரலாற்றைப் படைக்க, வாக்குப்பதிவின் கடைசி விநாடி வரை, தொண்டர்களும், கூட்டணி இயக்கங்களின் லட்சியம் மிகுந்த தோழர்களும் இடையறாது பணியாற்றிட அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாத அரசாக நிலைக்க வைப்போம். வெற்றிக் கோப்பைகளோடு 23-ந்தேதி உற்சாகம் துள்ளிவர காத்திருக்கும் உங்களை, இருகரம் கூப்பி வணங்கி வரவேற்க காத்திருக்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story