வேலைக்கு போன இடத்தில் மலேசியாவில் 48 தமிழர்கள் தவிப்பு சம்பளம் கேட்டால் அடித்து உதைப்பதாக வாட்ஸ்-அப்பில் உருக்கம்


வேலைக்கு போன இடத்தில் மலேசியாவில் 48 தமிழர்கள் தவிப்பு சம்பளம் கேட்டால் அடித்து உதைப்பதாக வாட்ஸ்-அப்பில் உருக்கம்
x
தினத்தந்தி 28 April 2019 11:00 PM (Updated: 28 April 2019 7:10 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு சம்பளம், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இன்றி அல்லல்படும் 48 தொழிலாளர்கள், தங்களை காப்பாற்றக்கோரி ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு சம்பளம், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இன்றி அல்லல்படும் 48 தொழிலாளர்கள், தங்களை காப்பாற்றக்கோரி ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வீடியோ வெளியீடு

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அங்கு சம்பளம், உணவு, தங்குமிடம் போன்ற வசதிகள் இன்றி தவிக்கும் அவல நிலை அடிக்கடி நிகழ்கிறது. அவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் மலேசியாவில் கடும் சித்ரவதைகளை அனுபவித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 48 பேர் தங்களை காப்பாற்றுமாறு வாட்ஸ்அப் மூலம் வீடியோ பகிர்ந்து உள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் தொழிலாளி ஒருவர் மிகவும் உருக்கமாகவும், பதைபதைப்புடனும் கூறியிருப்பதாவது:-

நெல்லையை சேர்ந்தவர்கள்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் 48 பேர் மலேசியாவுக்கு வந்து ஒரு நபரால் ஏமாற்றப்பட்டு 3 மாதங்களாக தவிக்கிறோம். வேலைக்கு சேர்ந்த முதல் மாத சம்பளம் கொடுத்தார்கள். 2 மற்றும் 3-வது மாத சம்பளம் வழங்கவில்லை. எந்த வசதியும் இல்லை. படுக்க பாய் கூட கிடையாது. எங்கள் முதலாளி மலேசியாவில் உள்ள தமிழ்க்காரர். நாங்கள் வேலைபார்ப்பது ஏஜெண்ட் எனர்ஜி கம்பெனி.

சம்பளம் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டால், ‘உங்கள் பாஸ்போர்ட் எங்களிடம் உள்ளது. எந்த செலவும் உங்களுக்கு செய்யமுடியாது. தூதரகம் போனாலும் உங்களால் எதுவும் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் உங்களை விடமாட்டோம்’ என்று அடித்து மிரட்டுகிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரு காட்டுக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். எங்களை கண்காணிக்கவும் 4 பாதுகாவலர்கள் நியமித்து இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் மூலம்...

எங்களை அறையில் அடைத்து அடிக்கிறார்கள். ‘சம்பளமே தரவேண்டாம், ஊருக்கு அனுப்பிவிடுங்கள்’ என்று கேட்டாலும் விட மறுக்கிறார்கள். ‘பிணமாகத்தான் உங்களை ஊருக்கு அனுப்புவேன்’ என்று மிரட்டுகிறார்கள். எங்கள் நிலைமை குறித்து எங்கள் வீட்டில் கூட சொல்ல முடியவில்லை. நாட்கள் செல்ல செல்ல எங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏற்கனவே 10 குழுக்கள் ஈடுபட்டு முடியாத வேலையை எங்களை முடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். மது அருந்திவிட்டு இரவில் எங்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இப்போது கூட அவர்கள் வெளியில் சென்ற சில நிமிடங்களில் இந்த வீடியோவில் பேசுகிறோம். இனி வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை.

எனவே இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மலேசியாவில் உள்ள உங்கள் நண்பர்களை தொடர்புகொண்டு எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். தமிழக முதல்-அமைச்சரை தொடர்பு கொண்டாவது காப்பாற்றுங்கள். உங்களை கையெடுத்து கும்பிடுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story