பண்ருட்டி அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. சின்னத்தின் பட்டன் மாயம் 2½ மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்


பண்ருட்டி அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. சின்னத்தின் பட்டன் மாயம் 2½ மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்
x
தினத்தந்தி 19 April 2019 3:45 AM IST (Updated: 19 April 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. வேட்பாளருடைய சின்னத்தின் பட்டன் மாயமாகி இருந்தது.

கடலூர், 

பண்ருட்டி அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. வேட்பாளருடைய சின்னத்தின் பட்டன் மாயமாகி இருந்தது. இதனால் 2½ மணி நேரம் ஓட்டுப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் காசி.தங்கவேல் உள்பட 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டியை அடுத்த திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அங்கு உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் திருவதிகை செட்டிபட்டறை காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தெய்வநாயகி (வயது 20) என்ற இளம் வாக்காளர் தனது முதல் வாக்கை பதிவு செய்ய வந்தார். அப்போது அவர் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. சின்னத்தின் பட்டன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வாக்குப்பதிவு நிறுத்தம்

இதுபற்றி அவர் வாக்குச்சாவடி அலுவலரிடம் தகவல் தெரிவித்தார். உடனே வாக்குச்சாவடி அலுவலரும், வேட்பாளர்களின் முகவர்களும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஆய்வு செய்தபோது, சின்னத்தின் பட்டன் மாயமாகி இருந்ததை கண்டனர்.

இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு 210-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 657 பேரில் 386 வாக்காளர்கள் மட்டும் ஓட்டுப்போட்டு இருந்தனர்.

மாற்றப்பட்டது

இதுபற்றி தகவல் அறிந்த அ.ம.மு.க. வேட்பாளர் காசி.தங்கவேல், அவரது முகவர் சுந்தரமூர்த்தி, பக்தரட்சகன், வேல்முருகன் மற்றும் கட்சிக்காரர்கள் திருவதிகைக்கு விரைந்து வந்தனர். வேட்பாளர் காசி.தங்கவேல் வாக்குச்சாவடிக்குள் சென்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா மற்றும் பெல் நிறுவன பொறியாளர்கள் விரைந்து வந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றிவிட்டு புதிய எந்திரத்தை வைத்தனர். இதுபற்றி வேட்பாளரிடம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

எதிர்ப்பு

ஆனால் அந்த வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவை தொடரக்கூடாது, வாக்குப்பதிவை ரத்து செய்து விட்டு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வேட்பாளர் வலியுறுத்தினார். இதுபற்றி கலெக்டருக்கும் தகவல் தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு, மீண்டும் வாக்குப்பதிவை தொடர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் வாக்குச்சாவடி மையத்துக்கு துணை ராணுவப்படையினர் வந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி மையத்துக்குள் இருந்த அ.ம.மு.க.வினரை வெளியேற்றினார்கள். அதன்பிறகு மாலை 3.15 மணி அளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து அங்கு 2½ மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

இந்த சம்பவத்தையொட்டி அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story