வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு: ஆற்காடு அருகே பதற்றம் வாக்காளர்கள் பதறியடித்து ஓட்டம்
ஆற்காடு அருகே வாக்குப் பதிவு மையத்தில் கும்பலை கலைக்க துணை ராணுவப்படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
ஆற்காடு,
ஆற்காடு அருகே வாக்குப் பதிவு மையத்தில் கும்பலை கலைக்க துணை ராணுவப்படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் வாக்காளர்கள் பதறியடித்து ஓடினர்.
வாக்குப்பதிவு
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அடங்கிய ஆற்காடு கீழ்விஷாரம் அருகில் உள்ள ராசாத்துபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாலை 5.30 மணியளவில் ராணிப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.காந்தி ஆதரவாளர்களுடன் ராசாத்துபுரம் வாக்குச்சாவடி மையம் அருகே வந்தார். அப்போது ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் காந்தி எம்.எல்.ஏ. அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் ஆகியோர் 200-க்கும் மேற்பட்டவர்களுடன் வாக்குச்சாவடி அருகே வந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு
அவர்களை உள்ளே செல்லவிடாமல் துணை ராணுவப்படை வீரர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பா.ம.க.வினரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்துசெல்லாமல் துணை ராணுவப்படை வீரர்களை முற்றுகையிட்டனர்.
இதனால் துணை ராணுவப்படை வீரர் ஒருவர் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் பா.ம.க.வினரும், ஓட்டுப்போடுவதற்காக நின்றிருந்த வாக்காளர்களும் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். பா.ம.க.வினர் வாக்குப்பதிவு எந்திரங்களை தூக்கிச்செல்ல வந்திருப்பதாக நினைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் 45 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது. எனவே வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் கூடுதலாக 7 மணி வரை நடைபெற்றது.
வேட்பாளர் கார் உடைப்பு
ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி நேற்று மாலை 3 மணியளவில் பி.கஸ்பா பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட காரில் வந்தார். அ.தி.மு.க.வினர் அவரது காரை முற்றுகையிட்டு வரக்கூடாது என தடுத்தனர். அ.ம.மு.க.வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் ஆர்.பாலசுப்பிரமணியின் கார் கண்ணாடியை தாக்கி உடைத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். வேட்பாளரை எப்படி தடுக்கலாம் என கூறி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு வாக்குச்சாவடியில் தி.மு.க., தே.மு.தி.க.வினருக்கு இடையே கட்சி கரை வேட்டி, துண்டு அணிந்திருந்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் தி.மு.க. பிரமுகர் சிவக்குமார் காதில் அடிபட்டு ரத்தம் வெளியேறியது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல ஆரணியில் வேறு சம்பவங்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தஞ்சையில் மோதல்
தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. தஞ்சை கீழவாசல் ஆடக்காரத்தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடையும் தருவாயில் அ.தி.மு.க. வேட்பாளரின் பூத் ஏஜெண்டு இரட்டை இலை சின்னத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பூத் ஏஜெண்டு வெளியே வந்து தகவல் தெரிவித்ததும் அ.தி.மு.க.வினர் சிலர் அங்கு வந்தனர். அப்போது வாக்குச்சாவடியில் இருந்த தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் தி.மு.க.வை சேர்ந்த அமிர்தராஜ் என்பவரின் மண்டை உடைந்தது. மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். 3 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு வாக்குச்சாடி முன்பு திரண்டு இருந்த அரசியல் கட்சியினரை போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பா.ஜ.க.வினருக்கு கத்திக்குத்து
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அருமநல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க.வை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அ.ம.மு.க.வை சேர்ந்த சிம்சனுக்கும், சதீஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டு சிலர் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.
வீரவநல்லூருக்கு அவர்கள் வந்ததும் அ.ம.மு.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. சிம்சன் உள்ளிட்ட பலர் கும்பலாக கத்தி மற்றும் கற்களால் பா.ஜ.க.வினரை தாக்கினர். இதில் சதீஷ்குமாருக்கு கத்திக்குத்து விழுந்தது. 4 பேர் கற்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். 5 பேரையும் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story