தமிழகத்தில் எந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தலை நடத்த முடியாது? அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் எந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தலை நடத்த முடியாது? என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகியதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனையை மேற்கொண்டது. இதற்கிடையே பணம் பதுக்கல் தொடர்பாக கிடைத்த தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனையும் நடந்தது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையை மேற்கொண்டபோது ரூ.11 கோடி வரையில் சிக்கியது. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக, தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இத்தனை பரபரப்புக்கு மத்தியில் நேற்று பிரசாரம் முடிந்த பின்னர் தூத்துக்குடியில் கனிமொழியின் வீட்டிலும், ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ரூ. 1.48 கோடி சிக்கியது.
தமிழகத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இத்தனை சம்பவங்களை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ள தொகுதிகள் எவை? என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக தேர்தல் அதிகாரிடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story