கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா?- திருவாரூரில் மு.க.ஸ்டாலின்
கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா? என்று இறுதிகட்ட பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருவாரூர்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் வேட்பாளர்களும் வீதி, வீதியாக, வீடு, வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். சுட்டெரிக்கும் கடும் வெயிலிலும் ஆங்காங்கே பிரசாரம் நடந்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில், நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட வலங்கைமானில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பெரிய துறைமுகம் அமைக்கப்படும். விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதுமட்டுமல்லாது, விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படும். அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி, பிரதமர்கள் பலரை உருவாக்கியவர் கலைஞர். அப்படிப்பட்டவருக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா? கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதிக்கு இடம் தர முதல்வர் பழனிசாமி மறுத்து விட்டார் என்று கூறினார்.
Related Tags :
Next Story