தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தது ஏன்?


தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தது ஏன்?
x
தினத்தந்தி 14 March 2019 4:45 AM IST (Updated: 14 March 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி நேற்று திடீரென அ.தி.மு.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்றது. இது அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து என்.ஆர்.தனபாலன் விளக்கம் அளித்து உள்ளார்.

சென்னை, 

பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தி.மு.க. கூட்டணியிலேயே அங்கம் வகித்து வந்தது. தேர்தல் சமயங்களிலும், போராட்டங்கள் நடைபெறும் போதும் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே பெருந்தலைவர் மக்கள் கட்சி இருந்து வந்தது.

மேலும் 2 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்து பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதில் தோல்வியையே தழுவினார். இந்தமுறையும் காலியாக உள்ள பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் இதற்கு தி.மு.க. தரப்பு பச்சைக்கொடி காட்டவில்லை.

அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பு

இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் என்.ஆர்.தனபாலன் நேற்று அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அவரை அ.தி.மு.க. தலைமை உற்சாகமாக வரவேற்றது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் என்.ஆர்.தனபாலன் பங்கேற்றார்.

என்.ஆர். தனபாலன் விளக்கம்

அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது குறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு கடந்த ஓர் ஆண்டாக உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. தி.மு.க. சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு உள்ளேன்.

ஆனால், தி.மு.க.வில் எங்களை கூட்டணி கட்சியாக கருதாமல், தோழமை கட்சியாகவே கருதினர். எனவே, எங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாத காரணத்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றோம். அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கூட்டணி கட்சி கூட்டத்திற்கு எனக்கு கூட்டணி கட்சி தலைவராக அழைப்பு விடுக்கப்பட்டதுடன் உரிய மரியாதையும் அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story