பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை அதிகாரி தகவல்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வேகமாக பரவியது. அந்த தகவல் தவறான செய்தி என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழ்நாட்டில் 4ஜி சேவையை பெரிய அளவில் தொடங்க தயாராகி வருகிறது. கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக 4ஜி சேவை வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய நகரங்களிலும், அதைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் 4ஜி சேவை தொடங்கப்பட உள்ளது.
கோவை மற்றும் சேலம் நகரங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு அவர்களது 3ஜி சிம்முக்கு பதிலாக, இலவசமாக 4ஜி சிம் வழங்கப்பட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4ஜி சிம் வழங்கப்பட்ட உடன் 4ஜி சேவை இந்த இரு நகரங்களிலும் தொடங்கப்படும். 4ஜி வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பதிவிறக்கம் 21 எம்.பி.பி.எஸ். வேகம் வரை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சேர்ந்து வருகிறார்கள். மற்ற நிறுவனங்களில் இருந்து எம்.என்.பி. முறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக ஒரு தவறான செய்தி ஒரு சில ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவது குறித்து எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக இந்திய மக்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சேவையை அளிக்கும் வலுவான ஒரு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
பலத்த போட்டியின் காரணமாக ஏற்பட்ட கட்டண குறைப்பினால் உண்டான நிதி பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு நிதி உதவி திட்டத்தை தயாரித்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் என்றென்றும் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்துவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story