கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
நாகர்கோவில்
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ரூ.22½ கோடியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சுமார் 5½ ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் 7½ அடி உயரத்தில் வெங்கடாசலபதி சிலை, 3 அடி உயரத்தில் பத்மாவதி தாயார் சிலை, 3 அடி உயர ஆண்டாள் சிலை, 3 அடி உயர கருட பகவான் சிலை மற்றும் கோவில் முன்பாக 40 அடி உயர கொடிமரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடைபெறுவதை போன்று இங்கும் அனைத்து வகையான விழாக்களும், பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 7 மணி அளவில் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் மற்றும் கருட பகவான் ஆகிய சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடந்தது.
திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர்.
காலை 8.45 மணி முதல் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தரிசனம் முடித்து வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, புளியோதரை, தயிர்சாதம் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். குமரி மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து இருந்தனர். பக்தர்கள் கார், வேன்கள், பஸ்களில் வந்து இருந்ததால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Related Tags :
Next Story