தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றமா? நடிகை குஷ்பு சூசக பதில்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து நடிகை குஷ்பு சூசகமாக கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தனது மனைவி ஷமீம் தேவுடன் நேற்று சென்னை வந்தார். அவர்கள் மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். சென்னை நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுத்த அவர்களை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியானது சுயநல கூட்டணி. பாரம்பரியமாக கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின்படி உருவாகும் கொள்கை இல்லாத கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுவதற்கு முன் தங்கள் கட்சியையும் பார்க்க வேண்டும்.
இப்போதும், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுடன் அவர்கள் கூட்டணியில் உள்ளனர். அது பாரம்பரிய கூட்டணி இல்லையா? அதுவும் பாரம்பரிய கூட்டணி தானே. சுயநலக் கூட்டணி என்று பிரதமர் எதை வைத்து கூறுகிறார் என்று அவருக்கு தான் தெரியும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி சுயநல கூட்டணியா? என்று மக்கள் சொல்லட்டும்.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்து உள்ளது. அந்த தோல்வியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. பா.ஜனதா வாங்கிய அடி பலமாக இருப்பதால் இன்னும் அதில் இருந்து மீளவில்லை.
குலாம்நபி ஆசாத்தை நட்பு ரீதியில் சந்தித்தேன். அவரது மனைவியும் உடன் வந்திருந்தார். அவருக்கும் மரியாதை தெரிவிப்பதற்காக வந்தேன். நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து இதுவரை நான் குலாம்நபி ஆசாத்திடம் பேசியது இல்லை. மாற்றங்கள் வரும் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். வரும்போது பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story