பெரியார் நினைவு தினம்: மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி


பெரியார் நினைவு தினம்: மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 24 Dec 2018 11:45 PM (Updated: 24 Dec 2018 9:06 PM)
t-max-icont-min-icon

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியாரின் உருவச்சிலை மற்றும் அதன் கீழே அவருடைய உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

திராவிடர் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி தலைமையில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்பட நிர்வாகிகள் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் பெரியார் சிலையில் இருந்து கட்சி கொடிகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டு வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், குணசேகரன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நிர்வாகிகள் வி.பி.அய்யர், முருகேசபாண்டியன், சுந்தரலிங்கம் ஆகியோரும், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை சின்னப்போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story