உலக தமிழர்களை ஒருங்கிணைக்க ‘தமிழியக்கம்’ அமைப்பு சென்னையில் நடந்த தொடக்க விழாவில் தலைவர்கள் பங்கேற்பு


உலக தமிழர்களை ஒருங்கிணைக்க ‘தமிழியக்கம்’ அமைப்பு சென்னையில் நடந்த தொடக்க விழாவில் தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Oct 2018 11:06 PM (Updated: 15 Oct 2018 11:06 PM)
t-max-icont-min-icon

உலக தமிழர்களை ஒருங்கிணைக்க ‘தமிழியக்கம்’ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

உலக தமிழர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக ‘தமிழியக்கம்’ என்ற அமைப்பு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழியக்கத்தின் நிறுவன தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கருமுத்து தி.கண்ணன் வரவேற்றார்.

மொரீசியஸ் நாட்டு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டு பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ‘தீந்தமிழ் திறவுகோல்’ என்ற நூலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட டாக்டர் அக்பர் ஹவுசர் பெற்றுக்கொண்டார். ‘தமிழியக்கம்’ அமைப்பின் வலைத்தளத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.

தொடக்க பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்றவேண்டும். சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவி ஏற்கும்போது அவரவர் தாய்மொழியில் கையொப்பம் இடலாம் என்ற விதியை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் இலக்கிய பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும். தமிழக விமான நிலையங்களில் தமிழிலும் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 8-வது உலக தமிழ் மாநாட்டில் முத்தமிழுடன் 4-ம் தமிழாக அறிவியல் தமிழை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். தகவல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களது நலம் பேணி, பாதுகாப்பான முன்னேற்றமான ஒரு வாழ்க்கை தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

இவர்களில் பலர் அந்நாடுகளில் தமிழ் மொழியை பேசுவதில்லை. தமிழ் மொழியை பேசவும், எழுதவும் ஆர்வம் அற்றவர்களாகவும் வளர்ந்துவருகின்றனர். இது தமிழர்களாகிய நமக்கு வருத்தம் தருகின்ற அதேநேரத்தில் மறுக்க முடியாத உண்மை. தமிழுக்கும், உலக தமிழின முன்னேற்றத்துக்கும் தொண்டாற்ற முனைந்திருக்கும் ‘தமிழியக்கம்’ அமைப்புக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

கோ.விசுவநாதன் பேசுகையில், “உலக தமிழர்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் நோக்கம். தமிழை தமிழகத்தில் பாதுகாப்போம். அயல்நாட்டில் வளர்ப்போம். தமிழ் அமைப்புகள் மற்றும் மத்திய-மாநில அரசுகளுடன் இணைந்து தமிழை மேம்படுத்துவது தான் எங்கள் பணியாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின் உதவியோடு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு தமிழியக்கம் விரும்புகிறது” என்றார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்மிக தமிழுக்கு தனி துறை இல்லை. ஆன்மிக தமிழ் இருக்கை அமைய தமிழியக்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு நான் ரூ.10 லட்சம் தருகிறேன். மத்திய பல்கலைக்கழகங்களில் சங்க இலக்கியங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டு வருகிறது. தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் மோடிக்கு ஒரு தமிழன் கூட பாராட்டு தெரிவிக்கவில்லை” என்றார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் பாராட்டரங்கம் நடந்தது. இதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் உள்பட பலர் பாராட்டுரை வழங்கினர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஊரன் அடிகள் உள்பட பல மூத்த தமிழ் சான்றோர்கள் பாராட்டப்பட்டனர்.

‘தமிழியக்கத்தின் வாழ்த்தரங்கம் மாலை நடந்தது. அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “உலகிலேயே தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி. தமிழர்கள் எதையும் சாதிக்கமுடியும் என்று சாதித்தார்கள். ஆபத்துகளை தடுக்கும், தரணியெல்லாம் கொண்டுசெல்லும், உலக தமிழ் சங்கங்களை இணைக்கும் விதமாக தமிழியக்கம் இருக்கவேண்டும். உங்கள் கரங்களை நாங்கள் வலுப்படுத்துவோம்” என்றார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story